கோலமாவு கோகிலா சினிமா பட பாணியில் சம்பவம்:ஊறுகாய் வேனில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கடத்தல்திருக்கோவிலூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்

திருக்கோவிலூரில் ஊறுகாய் வேனில் விலை உயர்ந்த மதுபாட்டில்களை கடத்தியவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2023-08-19 18:45 GMT


திருக்கோவிலூர், 

நடிகை நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா என்ற சினிமா படத்தில் கோலமாவை விற்பனைக்காக எடுத்து செல்லும் வேனில், விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி சென்று விற்பனை செய்வது படமாக்கப்பட்டு இருக்கும். அதேபோன்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

லாரியை மறித்து சோதனை

திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த பார்சல் லாரி ஒன்றை நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். அதில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருண்சாமி என்பவரின் மகன் கலைச்செல்வன் (வயது 28) என்பது தெரியவந்தது.

விலை உயர்ந்த மதுபாட்டில்கள்

மேலும், லாரி மதுரை சிக்கந்தர்புரத்தை சேர்ந்த ஒரு ஊறுகாய் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், அந்நிறுவனத்தில் இருந்து ஊறுகாயை சிதம்பரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடைகளில் இறக்கிவிட்டு மதுரையை நோக்கி செல்வதாக போலீசாரிடம் கலைச்செல்வன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு செல்பவர் ஏன் திண்டிவனம், செஞ்சி வழியாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து லாரியை முழுவதுமாக சோதனை செய்தனர்.

அதில், 13 அட்டை பெட்டிகளில் புதுச்சேரியை சேர்ந்த விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து கலைச்செல்வன் மதுபாட்டில்களை கடத்தி செல்வது தெரியவந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து கலைச்செல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்