கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயற்சி:520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:ஜீப் டிரைவர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-11 18:45 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றி சென்ற ஜீப்களை மறித்து பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஒச்சாத்தேவன் மற்றும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநில பதிவு எண் கொண்ட ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் ஜீப்பில் காய்கறிகளுக்கு இடையே சுமார் 520 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜீப்பை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், போடி அணைக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது.

ஜீப் டிரைவர் கைது

மேலும் கேரள மாநிலம் கருவக்குளம் பகுதியைச் சேர்ந்த சித்ரா, செல்வி ஆகியோர் கம்பம் பகுதியில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவிற்கு விற்பனைக்காக கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்த பயன்படுத்திய ஜீப்பை உத்தமபாளையம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பின்னர் ரேஷன் அரிசி உத்தமபாளையம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சித்ரா, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்