உயர் இடத்தை பெற போராட வேண்டும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
உயர் இடத்தை பெற போராட வேண்டும் என்று ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
உயர் இடத்தை பெற போராட வேண்டும் என்று ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் `நான் முதல்வன்' என்ற தலைப்பில் கணினி குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் கோ. மீனா தலைமை தாங்கினார். கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்றார்.
இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
கல்லூரி படிப்பை பெண்கள் தொடர்வதற்கு சவாலான காலகட்டங்கள் இருந்தன. இதற்கான விதைகள் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அப்போதே அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் தொடர்ந்து போராடினர். இதன் அடிப்படையிலேயே பெண்கல்விக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
போராடி...
பெற்றோர்கள் உங்களை கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் புத்தகத்தை எடுத்து படித்தாலே போதும், அதை கண்டு உங்கள் பெற்றோர்கள் வியந்து பாராட்டுவார்கள். உங்கள் குடும்பம் சந்தோஷப்படும். ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும், அவர்களுக்குள் ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு புதிய சக்தியும், புதிய ஆற்றலும் உருவாகிறது.
இந்த மிகப்பெரிய ஆற்றல் என்ன என்பதை மாணவ சக்தியாகிய நீங்களே உங்களுக்குள் தேடி கண்டுபிடித்து அதை வெளிக் கொண்டு வந்து இந்த நாட்டுக்கும், சமூகத்திற்கும் பெரும் முன்னேற்ற பாதையை எடுத்துச் செல்ல வேண்டும். மிகப்பெரிய பதவி சவுகரியம் எல்லாம் எப்போதும் உங்களை தேடி இலவசமாக வந்தாலும் அது உங்களுக்கு இறுதி வரையில் கூட வராது. நீங்கதான் போராடி உயர் இடத்தை பெற வேண்டும்.
சிக்கலான பிரச்சினைகள்
வாழ்க்கையில் சிக்கலான பிரச்சினைகளை கடக்கும்போது மனநிலையில் தடுமாற்றம் ஏற்படும். எத்தனை தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நமது மனநிலையை நம்மால் மாற்ற முயலும், வெற்றி இலக்கை நோக்கி நம்மால் முன்னேற முடியும். கல்லூரி பருவம் வாழ்க்கையில் போர்க்களம் போன்றது. அதில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் தமிழாய்வுத்துறை தலைவர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.