உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

Update: 2023-02-03 19:00 GMT

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால், ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

தமிழகத்தில் பொதுஇடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 13 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள், பூங்காக்கள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

பள்ளி அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு உள்ளபோதிலும், தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பள்ளி, கல்லூரி அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகள் காத்திருப்பதை பொருட்படுத்தாமல் பலரும் புகைபிடிப்பதை காண முடிகிறது. இது, மாணவ, மாணவிகள் நலனையும் பாதிக்கிறது.

தொடர்ச்சியான விழிப்புணர்வு

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

உஷ்னரா (நர்சு, கம்பம் அரசு ஆஸ்பத்திரி) :- புகையிலை பயன்படுத்துவது இதய நோய்கள் அதிகரிப்பதோடு, ரத்தத்தில் கட்டிகளை உருவாக்குகின்றன. சுவாசத்தில் தடை ஏற்பட்டு நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றது. இதனால் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து புகைப்பிடிப்பதால் நுரையீரல் சேதப்படுத்தப்பட்டு நுரையீரல் நோய் ஏற்படுகின்றது. புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகைப்பவரின் அருகில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, புகைத்தலால் சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல் நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. தற்போது இளைய தலைமுறையினரிடம் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அவர்களை நல்வழிப்படுத்த தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அபராதம் விதிப்பு

அறிவுச்செல்வம் (சுகாதார அலுவலர், தேனி அல்லிநகரம் நகராட்சி) :- பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம். அந்த வகையில் வாரம் ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் வசூலாகிறது. பஸ், ரெயில்களில் புகைபிடிக்கும் பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பஸ் நிலையங்களில் தான் கட்டுப்பாடு இன்றி உள்ளது. அபராதம் விதித்து விட்டு சென்ற சில நிமிடங்களில் மீண்டும் பலர் புகைபிடிக்கத் தொடங்கி விடுகின்றனர். மக்களிடம் சுயகட்டுப்பாடு வந்தால் தான் இதில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இந்த உத்தரவை அமல்படுத்தும் இடத்தில் உள்ள அனைத்து துறையினரும் இந்த அபராத விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மேலும் இதை கட்டுப்படுத்த ஏதுவாக அமையும்.

கடுமையாக்க வேண்டும்

மோகன்குமார் (தேனி அரசு சட்டக்கல்லூரி மாணவர்) :- பொதுஇடங்களில் புகை பிடிப்பது குற்றம் என்று தெரிந்தும், தெரியாமலும் பலர் அன்றாடம் பொது இடங்களில் அந்த தவறை செய்கின்றனர். புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்பவர்கள், இந்த தடை சட்டத்தை மீறுவதை வியப்பாக பார்க்க முடியவில்லை.

ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள் அதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பது என்பது 'ஸ்டைல்' போன்று பார்க்கப்படுகிறது. அது குற்றம் என்பதை உணர்த்த வேண்டும் என்றால், தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

இளம்வயதில் மாரடைப்பு

டாக்டர் அறவாழி (இதய நோய் சிகிச்சை நிபுணர், தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி) :- புகைபிடிக்கும் பழக்கத்தால் சமீபகாலமாக இளம்வயதில் மாரடைப்பு பிரச்சினையை அதிக அளவில் பார்க்கிறோம். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு வரும் பலரை அப்படி பார்க்கிறோம். புகைபழக்கத்தால் நுரையீரல் தான் முதலில் பாதிக்கப்படும். நுரையீரல் சிதைவு நோய் ஏற்படும். மூச்சுத்திணறல், சளி, இருமல் அதிகரித்து இதயத்தை செயல் இழக்கச் செய்யும். நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புகைபிடிப்பவர்களை மட்டுமின்றி அருகில் நிற்பவர்களுக்கும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படும். வீடுகளில் புகைபிடிக்கும் போது, புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகள் அவர்களின் மனைவி, குழந்தைகளுக்கும் ஏற்படும். இளம்வயது மரணம் என்பது அவர்களின் குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு என்னதான் சிகிச்சை எடுத்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். புகைப்பழக்கம் உள்ளவர்களை பொறுத்தவரை, காலையில் எழுந்தவுடன், சாப்பிட்ட உடன், டீ குடித்த உடன் என அன்றாட ஒவ்வொரு செயல்களை தொடர்ந்தும் புகைபிடிக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும். நிகோடின் தடவிய பபுல்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி புகைபிடிக்க வேண்டும் என்ற நினைவை மறக்க வைக்க முயற்சி செய்யலாம். இருந்தாலும் அது தற்காலிகம் தான். தன்னம்பிக்கை இருந்தால் தான் முழுமையாக விடுபட முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகைபிடிப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, "கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்" என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, புகைபழக்கம் இருப்பவர்கள் தன்னையும், தன்னை சார்ந்த மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்