வாழப்பாடி பகுதியில்கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்500-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிப்பு

வாழப்பாடி பகுதியில் கால்நடைகளை பெரியம்மை நோய் தாக்கியது. இதனால் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-01-16 20:44 GMT

வாழப்பாடி, 

பெரியம்மை நோய்

வாழப்பாடி, முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதனால் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி அன்பரசு கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை. இதனால் தற்போது பெரியம்மை நோய் மாடுகளை தாக்கி வருகிறது. இந்த நோய் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது. மாட்டு பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி அதற்கு பூஜை செய்ய கூட முடியவில்லை. எனவே கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தீவிர நடவடிக்கை

இந்த நோயின் தாக்கம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை சேலம் மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன் கூறுகையில், விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவதில்லை. சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய்க்காக 2 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் தற்போது தடுப்பூசி வழங்கி வருகிறோம். அப்படி பெரியம்மை நோய் தாக்கியதாக அந்தந்த பகுதி கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தால் தடுப்பூசி போட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்