சிறு நூற்பாலைகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

கோவை மாவட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.90 கோடிக்கு நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-16 19:30 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.90 கோடிக்கு நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

2-வது நாளாக வேலைநிறுத்தம்

தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சிறு, குறு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 500 சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உள்ளன.

இந்த நிலையில் பஞ்சு இறக்குமதி வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துணிகளை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நூற்பாலைகள் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வங்கி கடன் வட்டி விகிதங்களை 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும், துணி வகைகள் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும், வெளிநாட்டு துணிகள், நூல் இறக்கு மதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக நூற்பாலை சங்கங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தன. அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.

சிறுநூற்பாலைகள் சங்கத்தினர் கூறியதாவது:-

உற்பத்தி பாதிப்பு

தமிழகத்தில் 1000 சிறு நூற்பாலைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினந்தோறும் சுமார் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நூற்பாலைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நூற்பாலைகளின் வேலைநிறுத்தம் காரணமாக அவர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்