விமர்சனம் செய்பவர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது
கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு, ஆனால் விமர்சனம் செய்பவர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கோவையில் கனிமொழி எம்.பி. பேசினார்.
கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு, ஆனால் விமர்சனம் செய்பவர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கோவையில் கனிமொழி எம்.பி. பேசினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி அம்பிகா வரவேற்றார்.
கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு பாதுகாப்பு
காலம் காலமாக பெண்கள், குழந்தைகளுக்கு என்னென்ன அச்சுறுத்தல் இருக்கிறதோ அவை அனைத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குள் கொண்டு வந்துள்ளோம். இதனால் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அபாயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆணும், பெண்ணும் சமம். சாதி கிடையாது என்று குழந்தைக ளுக்கு நாம் சொல்லிக்கொடுப்பது கிடையாது. பெண்களை மதிக்க வேண்டும் என்றும் சொல்வது இல்லை. பெண்களை வேறுமாதிரியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
பெண்களின் ஆடை
பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமையும் வரை நாம், நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது நமக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்டர்நெட்டில் ஒரு விஷயம் வந்துவிட்டால் நமது வாழ்க்கையே அழிந்துவிடும் என்று நினைப்பது தவறு. வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவுகளை மீண்டும் அகற்ற முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
பெண்கள் ஆடை அணிவது அவர்களுடைய சொந்த விருப்பம். இப்படிதான் ஆடை அணிய வேண்டும் என்று டிரஸ்கோடு வைத்து இருப்பதுதான் ஏன் என்பது தெரியவில்லை. பெண்கள் அணியும் ஆடை எப்படி இருந்தாலும், அவர்களை பார்க்கும் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும்.
கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது
நமது நாட்டில் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு.
ஆனால் விமர்சனம் செய்பவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. கருத்துக்கு எதிர்வினை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று.
நமது வாழ்க்கையில் சில தவறுகள் நடக்கும். அதற்கு எதிர்வினைகளும் இருக்கும். ஆனால் பெண்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வெட்கப்பட கூடாது. கோவை மாநகர காவல்துறை மாணவிகளுக்கு போலீஸ் அக்கா என்ற திட்டத்தை கொண்டு வந்து இருப்பது பாராட்டுக்குரியது.
சைபர் கிரைம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்லும்போது, ஏன் நீங்கள் இதற்குள் சென்றீர்கள், ஏன் இப்படி செய்து மாட்டிக்கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள்.
பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வரும் பெண்கள் புண்படும்படி கேள்விகளை போலீசார் கேட்கும்போது அவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இதை போலீசார் உணர வேண்டும்.
போலீசாருக்கு தெரிய வேண்டும்
பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதில் இருந்து விடுபட்டு வெளியே வர தேவையான வழிமுறைகளை பெற்றோர் செய்ய வேண்டும். சைபர் கிரைமில் பணியாற்றும் போலீசாருக்கு, பாதிக்கப்பட்ட வர்களை கையாளுவதில் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நன்றி கூறினார்.