ஓடம்போக்கி ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத் தாமரை
கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி உள்ளன. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி உள்ளன. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஓடம்போக்கி ஆறு
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடம்போக்கி ஆறு செல்கிறது. இந்த ஆறு மூலம் திருக்கண்ணங்குடி, ஆழியூர், ஆவராணி, புதுச்சேரி, சிக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நீர் பாசனம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து புதர் போல் மண்டி கிடக்கிறது. ஆற்றில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குவிந்து கிடப்பதால் தண்ணீர் செல்லும் பாதை அடைபட்டுள்ளது.
கடைமடை பகுதி
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் ஓடம்போக்கி ஆற்று முகத்துவாரம் பகுதி இதுவரை தூர்வாரப்படவில்லை.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் காவிரி நீர் கல்லணையை அடைந்து, கடைமடை பகுதியாக உள்ள நாகை மாவட்டத்தின் எல்லையான கீழ்வேளூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகாயத்தாமரை
இந்த நிலையில் ஆற்றில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், ஆகாயத்தாமரை செடிகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், இவ்வாறு செய்யாவிட்டால், பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் எனவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், 'கீழ்வேளூர் பகுதி பாசனத்துக்கு முக்கியமான ஆறாக ஓடம்போக்கி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு தடை இல்லை என்றால் தான், தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். ஆனால் தற்போது ஆகாயத்தாமரைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் ஆற்றில் தேங்கி நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்போது தான் கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். ஓடம் போக்கி ஆற்றில் புதர் போல் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்' என்றனர்.