வேலை வாய்ப்பற்றவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
வேலை வாய்ப்பற்றவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று நடக்கிறது
திருவாரூர் மாவட்டத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பற்ற 10 வட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதில், 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட குறைந்தது 5-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு இலவசமாக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நர்சிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட், தையல், கணினி அடிப்படை பயிற்சி மற்றும் பழுது பார்த்தல், அழகுகலை பயிற்சி, பிட்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சிக்கு பின்னர் தனியார் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது. மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பமுள்ளவர்களும் தங்களது பெயரினை பதிவு செய்து உரிய ஆலோசனை பெறலாம்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது ஆதார் அட்டை, கல்விச் சான்று, குடும்ப அட்டை, 100 நாள் வேலை அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வர வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீேலகா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.