சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

Update: 2022-10-30 16:17 GMT


சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹார விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. அன்று காலை அபிஷேக ஆராதனையும் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். பின்னர் தினமும் அபிஷேக ஆராதனைகள், திருவுலாக் காட்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் போருக்கு புறப்பாட்டார். மாலையில் பரவலாக மழை பெய்த போதிலும் மழைக்கிடையே சுப்பிரமணியசாமி சூரபத்மனை வதம் செய்தார். இந்த நிகழ்வில் காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 2-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் வீரக்குமார் சாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. வீரக்குமாரசாமி கோவில், மயில் ரங்கம் வைத்தியநாதே ஸ்வர சுவாமி கோவில் மற்றும் வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று வீரக்குமாரசாமிக்கு சந்தன காப்பு அபிஷேக அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சாமி ஊர்வலமாக புறப்பட்டு சோளீஸ்வரர் கோவில் சென்றடைந்து. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தாய் தந்தையான சிவன் பார்வதியிடம் ஆசி பெற்று பின்னர் வீரக்குமாரசாமி கோவில் வந்தடைந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.வெள்ளகோவில். எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் சூர சம்கார விழாவை முன்னிட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

சோளீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது,

மேலும் செய்திகள்