திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும்-சிவல்புரி சிங்காரம் பேச்சு
திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும் என்று சிவல்புரி சிங்காரம் கூறினார்.
திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும் என்று சிவல்புரி சிங்காரம் கூறினார்.
ராமநவமி விழா
காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 18-ம் ஆண்டாக ராமநவமி விழாவும், ஏகதின லட்சார்ச்சனை விழாவும் கிரிவலக்குழுத்தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராளமாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி அனுமனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். கோவில் நிர்வாகி முத்துராமன் செல்வி அனைவரையும் வரவேற்றனர். தேவகோட்டை ஏகப்பன், காரைக்குடி அண்ணாமலை, திருப்பத்தூர் மணிமேகலை ஆகியோர் பக்திப்பாடல்களைப் பாடினார்கள். காரைக்குடி அழகப்பா கல்லூரி பதிவாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-
ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. நாம் நமது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போல இறைவன் பிறந்த நாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினால் இனிய வாழ்க்கை நமக்கு அமையும்.
இறைவனிடம் முறையிட்ட திதிகள்
பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும் பொழுது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கின்றது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதையறிந்த அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளும் மிகவும் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன் என்று சொல்லி அஷ்டமி திதியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமி திதியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார்.
இந்த இரண்டு திதிகளும் சந்தோஷப்பட்டன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. எனவே நாம் 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை.
வெற்றி கிடைக்கும்
அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்றைய தினம் கண்ணபிரானை வணங்கிய பிறகு காரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான், சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு காரியத்தைச் செய்யலாம்.
திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்த திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் விதி மாறி வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் காரைக்குடி மாணிக்கம், ஷர்மிளா பாலமுருகன், செல்வகுமார், கார்த்திகா மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.