கை குழந்தையுடன் அக்காள்- தங்கை தர்ணா
நிலத்தை அளவீடு செய்ய காலதாமதம் செய்வதை கண்டித்து வாணியம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கை குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலம் ஆக்கிரமிப்பு
வாணியம்பாடியை அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜோதி, லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், ரோஸி மற்றும் ரீட்டா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சுபாஷ் திருமணம் செய்துகொண்டு சின்னக்கல்லுப்பள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதே போல் இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து சேலத்தில் வசித்து வருகின்றனர்.
தாய் லட்சுமி கடந்த 12 வருடத்திற்கு முன்பும், தந்தை ஜோதி 2 வருடங்களுக்கு முன்பும் இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமான 57 சென்டு விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை உள்ளது. அதனை உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரீட்டா தங்களுடைய விவசாய நிலம் மற்றும் வீட்டு மனையை அளவீடு செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் பதிவு செய்து இது வரையில் 8 முறை சேலத்தில் இருந்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவுக்கு வந்து சென்றுள்ளார். வரும்போதெல்லாம் அடுத்த வாரம் வருமாறு கூறி அனுப்பி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரோஸி மற்றும் ரீட்டா ஆகிய இருவரும் கை குழந்தையுடன் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.