குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம் நடத்தினர்.
வாணியம்பாடியை அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜோதி, லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், ரோஸி, ரீட்டா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சுபாஷ் திருமணம் செய்துக்கொண்டு சின்னக்கல்லுப்பள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதேபோல் இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து சேலத்தில் வசித்து வருகின்றனர். லட்சுமி, ஜோதி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமான இடத்தை உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நிலத்தை அளந்து தருமாறு பணம் செலுத்தி நிலத்தை அளக்க நில அளவையர் வராத காரணத்தால் வாணியம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு 2 நாட்களுக்கு முன்பு ரீட்டா, ரோஸி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று நிலத்தை அளக்க அதிகாரிகள் ஒரு போலீசாருடன் சென்றதாகவும், நிலத்தை அளக்க அவர்களின் உறவினர்கள் தகராறு செய்ததால் அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரீட்டா, ரோஸி ஆகியோர் குழந்தையுடன் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தல் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.