சிறுவாணி அணை நீர்மட்டம் 19 அடியாக குறைந்தது
சிறுவாணி அணை நீர்மட்டம் 19 அடியாக குறைந்தது
கோவை
கோவைக்கு குடிநீர் வழங்கி வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்து உள்ளது.
சிறுவாணி அணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் 4 உறிஞ்சு குழாய்கள் இருக்கின்றன. அதில் 3 குழாய்கள் கீழ் நோக்கியும், கீழ்ப்பகுதியில் 4-வது இருக்கும் உறிஞ்சு குழாய் மேல் நோக்கியும் இருக்கிறது. மேலும் அணையில் இருந்து தானாகவே தண்ணீர் உறிஞ்சி சிறுவாணி மலைஅடிவார பகுதிக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
19 அடியாக குறைந்தது
தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணையில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 19 அடியாக இருக்கிறது.
அணையில் இருந்து தினமும் 6.3 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், தற்போது நீரேற்று நிலையத்தில் உள்ள 2 வால்வுகள் வெளியே தெரிகின்றன. அணையின் நீர்மட்டம் 15 அடிக்கும் கீழ் குறைந்துவிட்டால் 3-வது வால்வு வெளியே தெரிந்து விடும். தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருவதால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மே 15-ந் தேதி வரை
சிறுவாணி அணையில் 50 அடிக்கு தண்ணீரை தேக்க கேரள அதிகாரிகள் விடுவது இல்லை. அதிகபட்சமாக 43 அடி வரைதான் தேக்குகிறார்கள். முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டு இருந்தால் தற்போதைய நிலையில் அணையில் 30 அடிக்கு தண்ணீர் இருந்திருக்கும்.
இதனால் ஜூன் மாதம் வரை குடிநீருக்கு தண்ணீர் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அணையில் இருக்கும் தண்ணீரை வைத்து மே மாதம் 15-ந் தேதி வரை மட்டுமே வினியோகம் செய்ய முடியும். அதற்குள் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.