ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சிறுபாக்கம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சிறுபாக்கம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறுபாக்கம்
சிறுபாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்.புதூர், மாங்குளம், மா.குடிகாடு, ரெட்டாக்குறிச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் சிறுபாக்கத்தில் இயங்கி வந்த ஆம்புலன்ஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் சிறுபாக்கம் பகுதிகளில் விபத்தில் சிக்குபவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக விருத்தாசலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுபாக்கம் கிராம மக்கள் நேற்று அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் தங்களது பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.