சீர்காழி நகர்மன்ற கூட்டம்

சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம், அதன் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது.

Update: 2022-06-21 17:12 GMT
சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம், அதன் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது. ஆணையர்(பொறுப்பு) ராஜகோபால் முன்னிலை வகித்தார். எழுத்தர் ராஜகணேஷ் தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

ரமாமணி (அ.தி.மு.க.): சீர்காழி நகராட்சியில் இதுவரை ஆணையர் நியமிக்காதது ஏன்?. எனது வார்டில் குப்பைகளை சரிவர அள்ளுவது கிடையாது. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

வேல்முருகன் (பா.ம.க):- போக்குவரத்து நெருக்கடியான காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்வதற்கு தடை விதிக்க பரிந்துரைக்க வேண்டும்.

வாய்க்காலில் கழிவுநீர்

ராஜசேகர் (தே.மு.தி.க):- சீர்காழி நகரின் மையப்பகுதியில் உள்ள கழுமலைஆறு பாசன வாய்க்காலில் அரசு ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயமும், விளை நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது. ஆகவே, வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமிநாதன் (தி.மு.க):-நகரின் பல்வேறு பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

நித்யாதேவி (சுயேச்சை):-எனது வார்டில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். சாக்கடைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

சூரியபிரபா (பா.ம.க):- கோடை காலத்திலேயே வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

குளத்தை தூர்வார வேண்டும்

முழுமதி (ம.தி.மு.க):-பணமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முபாரக்அலி (தி.மு.க):-பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி எதிரில் சில மணி நேரம் மழை பெய்தால் குளம்போல மழைநீர் தேங்கி விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

ரஹ்மத் நிஷா (சுயேச்சை):- எனது வார்டில் உள்ள கப்பி சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும்.

வள்ளி(தி.மு.க.): மேட்டுத்தெரு பகுதிக்கு சிமெண்டு சாலை வசதி வேண்டும். மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ரம்யா (தி.மு.க):- சீர்காழி பெரிய கோவில் குடமுழுக்கு விரைவில் நடக்க இருப்பதால் சாலையின் இருபுறங்களிலும் பேவர் பிளாக் போடப்பட வேண்டும்.

பாலமுருகன் (சுயேச்சை):-நகரின் 10 வார்டுகளில் உள்ள கழிவுநீர், மழைநீர், ஈசானிய தெரு பகுதியில் தேங்குகிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

துர்கா ராஜசேகரன் (தலைவர்): உறுப்பினர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு படிப்படியாக செய்து கொடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்