இடிந்து விழும் நிலையில் சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 18:45 GMT

சீர்காழி:

இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் பழமையான வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்குட்பட்ட சீர்காழி, கைவிளாச்சேரி, தாடாளன் கோவில், விளந்திட சமுத்திரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், கடவாசல், திருக்கருகாவூர், எடமணல், திருமுல்லைவாசல், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை, வருமான சான்று, ஜாதி சான்று, இருப்பிட சான்று, திருமண சான்று, திருமண உதவி தொகை சான்று, ஊனமுற்றோர் உதவித்தொகை சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பின்பு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஒப்புதல் வழங்கிய பின்னர் தான் தாலுகா அலுவலகம் மூலம் மேற்கண்ட சான்றிதழை பெற முடியும்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் அலுவலகத்திற்கு வந்து வருவாய் ஆய்வாளரை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று வருகின்றனர். தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் தினமும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எந்த நேரம் வேண்டுமானாலும் மேற்கூரை முழுவதும் இடிந்து கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிகமாக செயல்பட நடவடிக்கை

சீர்காழி வக்கீல் நெடுஞ்செழியன் கூறுகையில், சீர்காழி இந்திரா நகரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. தற்போது மேற்கூரைகள் தினமும் பெயர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் எந்த நேரம் வேண்டுமானாலும் முற்றிலும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் மீண்டும் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் தர வேண்டும் என்றார்.

சீர்காழி ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், இந்த சேதம் அடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் நேரில் வந்து சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை பெற்று வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்தோடு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு பணிபுரியும் அலுவலர்களும் அச்சத்தோடு பணிபுரிந்து வருகின்றனர். எனவே அரசு ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதுவரையில் வேறு இடத்தில் தற்காலிகமாக அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்