சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்தது.

Update: 2022-10-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையர்கள் இளங்கோவன், சரவணன், ஒன்றியக்குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுலோச்சனா வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் உறுப்பினர்கள் பேசியதாவது:-

ஜான்சிராணி (சுயேச்சை):- மெய்கண்டனார் பள்ளியில் கழிப்பிடவசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

அறிவழகன் (சுயேச்சை):- ராதாநல்லூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலவழகி (தி.மு.க):- எனது பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரி கடந்த 6 மாதமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதோடு சேர்த்து சேதமடைந்த ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டிடங்களையும் சீரமைக்க வேண்டும்.

தலைவர்:-உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

அதிகாரிகள்

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயேஸ்வரன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்