தர்மபுரி மாவட்ட தொழில் முனைவோருக்கு சிப்காட் தொழிற்பூங்காவில் முன்னுரிமை வழங்க வேண்டும்-பொதுமக்கள் கருத்து

Update: 2023-03-13 18:45 GMT

தர்மபுரி:

சிப்காட் தொழிற்பூங்காவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிப்காட் தொழிற்பூங்கா

தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நில எடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றன.

முதல் கட்டமாக 1,733.63 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதுவரை சிப்காட் நிறுவனத்திடம் 478.38 ஏக்கர் பட்டா நிலமும், 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் என மொத்தம் 1,462.72 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் பணி

நிலம் ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க நில ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல முன்னணி நிறுவனங்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்துள்ளன. இந்தநிலையில் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சிப்காட் தொழில் பூங்கா தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கூடுதல் சலுகைகள்

தர்மபுரி மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் வெங்கடேஷ் பாபு:-

தர்மபுரி மாவட்டத்தில் 1,733 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. முதல் கட்டமாக 100 அடி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அண்டை மாநிலங்கள் மற்றும் திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி சென்றுள்ளனர். நமது தர்மபுரி மாவட்டத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பெருகும். இந்த தொழிற்பூங்கா நமது மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த சிப்காட் தொழில் பூங்காவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் புதிய தொழில்கள் தொடங்க கூடுதல் சலுகைகள் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தொழில்துறை பயிற்சி

சிட்கோ தொழிற்பேட்டை சங்க தலைவர் சரவணன்:-

தர்மபுரியில் புதியதாக தொடங்கப்படும் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். இந்த பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். சிப்காட் தொழிற் பூங்காவில் 20 சதவீத நிலத்தினை சிட்கோவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் குறு நிறுவனங்களை அமைக்கும் தொழில் முனைவோர்களின் வசதிக்காக குறைந்த பட்சம் 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை 50 சதவீத மானிய விலையில் முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஊரக பகுதிகளில், தாலுகா அளவில் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான தொழில் துறை பயிற்சிகளை, நடமாடும் பயிற்சி நிறுவனம் வாயிலாக மக்களை தேடி அவர்களது பகுதியிலேயே சென்று அளிக்க வேண்டும். இதன் மூலம் தொழில் துறை உற்பத்தியை அதிகப்படுத்தி பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் தேவைக்கு அமைக்கப்படும் சூரிய எரி சக்தி உபகரணத்திற்கு 25 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த தொழில்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கார்த்திகேயன்:-

தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலம் வந்துவிட்டது. நமது மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இந்த சிப்காட் தொழிற் பூங்காவில் வேலைவாய்ப்புகள் வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நமது மாவட்டத்திலேயே பணிபுரியும் வகையில் தர்மபுரி சிப்காட்டில் டெக்ஸ்டைல்ஸ் துறை சார்ந்த தொழிற் உற்பத்தி நிறுவனங்கள் குழுவாக ஒரே பகுதியில் அமைந்திட ஏதுவாக நிலம் வழங்க வேண்டும். இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் முயற்சிக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உரிய பிரதிநிதித்துவம்

சமூக ஆர்வலர் பிரதாபன்:-

தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் மாவட்டத்தை சேர்ந்த சிறுதானிய மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள், புளிபதப்படுத்தும் தொழிற்சாலைகள், கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதேபோல் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் பருத்தி, மரவள்ளி, தக்காளி, மாம்பழம், ஆகியவற்றை சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைவதையும் அதன் மூலம் இங்குள்ள தொழிலாளர்கள், பெண்கள், பல்வேறு விதமான படிப்புகளை படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீட்டில் பெரிய நிறுவனங்களுக்கு மிக அதிக அளவில் நிலம் ஒதுக்கீடு செய்வது சிறு, குறு தொழில் முனைவோரின் வாய்ப்பை பாதித்துவிடக்கூடாது. இதை கருத்தில் கொண்டு சிறு, குறு தொழில் முனைவோருக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்