சிங்கம்புணரியில்72.60 மில்லி மீட்டர் பதிவு: மதுரையில் விடிய விடிய பலத்த மழை - சிவகங்கை மாவட்டத்திலும் பரவலாக பெய்தது

மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

Update: 2022-11-12 20:23 GMT


மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

மதுரையில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன் தினமும், நேற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் பகலில் மழை இல்லை. ஆனால் நள்ளிரவில் தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது.

பலத்த மழையாக இல்லை என்றாலும், தொடர்ச்சியாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. அதே போல் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வழிந்தோட முடியாமல் குளம் போல் தண்ணீர் இருந்தது. சில இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதே போல் மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை நீடித்தது.

மழை விவரம்

மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிட்டம்பட்டி - 16.20, கள்ளந்திரி- 19.20, தனியாமங்கலம் - 18, மேலூர்-23, சாத்தையாறு அணை - 27, வாடிப்பட்டி - 45, திருமங்கலம்- 54.60, உசிலம்பட்டி - 22,

மதுரை வடக்கு - 53, தல்லாகுளம் - 46.2, விரகனூர்- 33.40, மதுரை விமான நிலையம் - 57.20, இடையபட்டி - 25, புலிப்பட்டி - 18.60, சோழவந்தான் - 24, மேட்டுப்பட்டி - 23.80, குப்பணம்பட்டி - 17.40, கள்ளிக்குடி -10.60, பேரையூர் - 45.20, ஆண்டிப்பட்டி பங்களா - 37.20, எழுமலை -25.20, பெரியப்பட்டி -16.20.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் நேற்றும் 2-வது நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மாவட்டத்தில் மொத்தம் 6 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை.

நேற்று காலை 6 மணி வரை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை 28.40, திருப்புவனம்-48.20, தேவகோட்டை-12.40, காரைக்குடி-69, திருப்பத்தூர்-16.30, காளையார்கோவில்-7, சிங்கம்புணரி-72.60.

மாவட்டத்தி்ல் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 72.60 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காளையார்கோவிலில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

ராமநாதபுரம்-விருதுநகர்

இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், கமுதி, வாலிநோக்கம் உள்ளிட்ட சில ஊர்களில் லேசான மழை பெய்தது.

மழை எச்சரிக்கை எதிரொலியாக ராேமசுவரத்தில் நேற்றும் மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மழை இல்லை., சில இடங்களில் சாரலாக பெய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்