பொங்கல் பரிசுத்தொகுப்பில் அறிவிக்கப்படாததால்பன்னீர் கரும்பு அறுவடை பணிகள் தாமதம்விவசாயிகள் கவலை
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு அறிவிக்கப்படாததால், கரும்பு அறுவடை பணிகள் தாமதமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அண்ணாமலைநகர்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் தித்திக்கும் கரும்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதனால் ஆண்டுதோறும் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், வடக்கு சாலியந்தோப்பு, கடவாச்சேரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு நன்கு செழித்து வளர்ந்துள்ளது.
கொள்முதல்
இ்ங்கு விளையும் கரும்புகளை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநில வியாபாரிகளும் இப்பகுதிக்கு நேரடியாக வந்து கரும்புகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 அடி கரும்பு துண்டும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கியது. கடந்த ஆண்டு முழு கரும்பு வழங்கப்பட்டது. இதற்காக இப்பகுதி விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
விவசாயிகள் கவலை
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேராக கரும்பு தோட்டங்களுக்கு சென்று முன் பணம் கொடுத்து கரும்புகளை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம் பெறும் என்று விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தனர். இதை நம்பியும் ஏராளமான விவசாயிகள் பன்னீர்கரும்பு சாகுபடி செய்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு பற்றிய அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ளம் சூழ்ந்து கரும்பு பயிர்கள் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு கரும்புகள் விலை அதிகரிக்கும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தற்போது கரும்புகள் அறுவடை செய்யும் பணியே தொடங்கவில்லை.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் கரும்பு அறுவடை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு அறிவிக்கப்படாததால் இன்னும் கரும்புகள் அறுவடை செய்யும் பணி நடக்கவில்லை. தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி செய்த கரும்புகள் விற்பனையாகுமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
ஏமாற்றம்
இது பற்றி பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குலோத்துங்கன் கூறுகையில், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் நிச்சயம் முழு கரும்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன் கரும்பு விவசாயிகள் கரும்பை பயிரிட்டனர். ஆனால் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை என்பது கரும்பு விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பழைய கொள்ளிடம் பகுதியில் உள்ள எங்கள் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ள நீர் சூழ்ந்து கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கரும்பு பயிரிட்டவர்கள் மட்டுமல்ல. இன்னும் கரும்புகள் வெட்டப்படாததால் கூலித்தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தமிழக அரசு தான் எங்களுக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.
வியாபாரிகள் வரவில்லை
விவசாயி சேகர் கூறுகையில், வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் கரும்புகளை வெட்ட தொடங்கி விடுவோம். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் இன்னும் கரும்பு வெட்டும் பணி தொடங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வியாபாரிகளும் இன்னும் வரவில்லை. இதனால் இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றார்.
கரும்பை சேர்க்க வேண்டும்
விவசாயி நடராஜன் கூறுகையில், ஆண்டுதோறும் நகைகளை அடகு வைத்து பெரும் செலவில் கரும்புகளை சாகுபடி செய்கிறோம். ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. மழை வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டு மீதியுள்ளதையாவது நல்ல விலையில் விற்கலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆகையால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.