பள்ளிகொண்டா நாகநாத ஈஸ்வரர் கோவிலில் வெள்ளிகிரீடம் திருட்டு

பள்ளிகொண்டா நாகநாத ஈஸ்வரர் கோவிலில் சுவரில் துளையிட்டு புகுந்த மர்மநபர்கள் வெள்ளிகிரீடம் , ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

Update: 2022-07-23 15:25 GMT

அணைக்கட்டு

பள்ளிகொண்டா நாகநாத ஈஸ்வரர் கோவிலில் சுவரில் துளையிட்டு புகுந்த மர்மநபர்கள் வெள்ளி கிரீடம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

கோவில்

பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் தெருவின் அருகே பிரசித்தி பெற்ற நாக நாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடி கிருத்திகை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு அன்னதான உணவு தயாரிக்க கோவிலுக்கு சமையலர்கள் வந்தனர். அவர்கள் கோவில் பணியாளருடன் கதவை திறந்து உள்ளே சென்றனர் அப்போது மூலவருக்கு அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த பீரோவும் மூலவர் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ராதாமணி பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்றது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் சுமார் 2 மணி நேரம் அங்கு பதிவாகியிருந்த மர்மநர்களின் ரேகைகளை பதிவு செய்தார். திருட்டில் ஈடுபட்டவர்கள் தங்களின் அடையாளம் பதிவாகாமல் இருக்க அங்கு இருந்த சி.சி.டி.வி, கேமராக்களை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி கிரீடம், ஈஸ்வரருக்கு சாத்தப்பட்டிருந்த தாலி சரடு, மற்றும் உண்டியல் காணிக்கை ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியுள்ளளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பள்ளிகொண்டாவில் கொள்ளையடிக்கப்பட்ட நாகநாத ஈஸ்வரர் கோவிலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை. திருட்டை தடுக்க கோவில் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்