பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிப்பு
பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து காளை வாகனத்தில் சிவபெருமானை எழுந்தருள செய்து பக்தர்கள் சிவசிவ, ஹரஹர கோஷத்தில் 3 முறை பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
இதையடுத்து, மூலஸ்தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமானுக்கு தீபாராதனை காண்பித்து நந்தி பெருமானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல் காசிக்கு வீசம் கூட என்றழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், திருமலை ராய சமுத்திரம் கத்திரி காமேஸ்வரர், கதிர் காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.