குலசேகரன்பட்டினத்தில் வங்கி மேலாளர் கையெழுத்தை போலியாக போட்டு 55 பவுன் மோசடி

குலசேகரன்பட்டினத்தில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, 55 பவுன் நகையை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-05 18:45 GMT

குலசேகரன்பட்டினத்தில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, 55 பவுன் நகையை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகை மதிப்பீட்டாளர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள படுக்கப்பத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து. இவருடைய மகன் சுடலை என்ற சுடலைராஜ் (வயது 48). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 23.7.2018 முதல் 17.6.2020 வரையிலான காலக்கட்டத்தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது, வங்கியில் நகைக்கடன் பெற வரும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அவர்கள் கேட்கும் கடன் தொகைகைய விட அதிகமான கடன் தொகைக்கு அடமானம் வைத்தும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை அவற்றின் உரிமையாளருக்கு தெரியாமல் அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக போட்டு நகைகளை திருப்பியதாகவும் கூறப்படுகிறது.

55 பவுன் மோசடி

அந்த நகைகளை அவரது கூட்டாளிகளான படுக்கப்பத்தை சேர்ந்த மகாராஜன் மகன் குமாரவேல் (41), தவசி பாண்டியன் மகன் ராம்குமார் (32), குலசேகரன்பட்டினம் வடக்கூரை சேர்ந்த எமிலியான்ஸ் மகன் ரமேஷ் (42) ஆகியோரின் பெயர்களில் அதிக தொகைக்கு அடமானம் வைத்ததாக ெதரிகிறது.

அவர்களின் பெயரில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை வங்கியில் இருந்து திருப்பி அதனை வைத்துக்கொண்டு ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து 786 ரொக்கப்பணம் மற்றும் 55 பவுன் தங்க நகைகளையும் மோசடி செய்து உள்ளனர்.

4 பேர் கைது

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சங்கரசுப்பிரமணியன் (35) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, சுடலை, ரமேஷ், குமாரவேல், ராம்குமார் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்