சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வெட்டன் விடுதி சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர், முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா வெட்டன் விடுதியை சேர்ந்த தெற்கு வாண்டான் விடுதி, கச்சத்தான் புஞ்சை, மின்னம் புஞ்சை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் அனைத்து கரைக்காரர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 30-ந்தேதி மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜை
தொடர்ந்து 31-ந்தேதி அங்குரார்பனம், ரக்ஷாபந்தனம், தனபூஜை, நாடி சந்தனம், கஜபூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. திருமறை பாராயணமும் நடந்தது. இந்த யாக சாலை பூஜைகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 5.30 மணிக்கு விநாயகர் துதியுடன் இறுதி கட்ட யாகசாலை பூஜை தொடங்கியது. கோ பூஜை, நாடி சந்தனம் நடைபெற்று சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகம்
இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. மேள தாளங்கள் முன் செல்ல சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் விமானத்தை சென்றடைந்தனர். அங்கு கோவில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 9.32 மணிக்கு 3 முறை கருட பகவான் கோவிலை சுற்றி வட்டமிட்டன.
இதை கண்ட பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அரோகரா, விநாயக பெருமானுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து முத்துமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதை தொடர்ந்து விநாயகருக்கும், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வெட்டன் விடுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வெட்டன்விடுதி, தெற்கு வாண்டான் விடுதி, கச்சத்தான்புஞ்சை, மின்னம்புஞ்சை, அனைத்து கரைகாரர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.