சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு தரும் சித்த மருத்துவம்

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் சிறந்த தீர்வு தரும் என்று சித்த மருத்துவர் தெரிவித்தார்.

Update: 2023-01-11 18:13 GMT

இதுகுறித்து சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் கூறியதாவது:-

சித்த மருத்துவம்

இன்றைய சூழலில் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உருவெடுத்து வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை பெற முதலில் நோயின் தன்மையை கண்டறிய வேண்டும்.

நாள்பட்ட சர்க்கரை நோயாளியாக இருந்தால் அதற்கு ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து காணப்பட்டால் அதைக்குறைக்க அலோபதி மருந்துகளின் உதவி தேவைப்படும். ஆனால், நீண்டகால சிகிச்சைக்கு சித்த மருத்துவம் தான் சிறந்தது. இதுபோன்ற நிலையில் சித்த மருத்துவர்களின் பரிந்துரை மிகவும் முக்கியம். பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதற்கு மருதம்பட்டை மற்றும் ஆவாரம்பூ கசாயம் நன்றாக வேலை செய்யும்.

கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவாரம்பூ நல்லது. தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட சர்க்கரை நோய்க்கு வில்வ மருந்து கொடுத்து குணப்படுத்தலாம். தோலில் அலர்ஜி, சத்துக்குறைவால் ஏற்பட்ட சர்க்கரை பாதிப்பாக இருந்தால் அதற்கு சீந்திலில் செய்த மருந்து நன்றாக வேலை செய்யும். ரத்த சர்க்கரை நோய்க்கு சிறுகுறிஞ்சான் மிகவும் நல்லது. இப்படி ஒவ்வொருவிதமான பாதிப்புகளுக்கும் ஒவ்வொருவிதமான மருந்துகள் உள்ளன. இதை மருத்துவர்களால் மட்டுமே கண்டறிந்து சிகிச்சை தர முடியும்.

உணவு கட்டுப்பாடு

குறிப்பாக சிறுகுறிஞ்சான் இலை, சீந்தில் இலை, வில்வ இலை, நிலவேம்பு, வேப்பிலை, மா இலை, நாவல் இலை, ஆடாதொடை இலை போன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மதுமேக சூரணம் மிகவும் நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த மதுமேக சூரணம் இலவசமாகவே கிடைக்கிறது. ஆரம்பகட்ட சர்க்கரை நோய்க்கு இந்த மதுமேக சூரணம் மிக அற்புதமாக வேலை செய்யும். கசப்பு, துவர்ப்பு நிறைந்த இந்த மூலிகைகள் மட்டுமல்லாமல் உணவுகளும் அப்படியிருக்கும்போது இரண்டு, மூன்று மாதங்களில் சர்க்கரை நோய் இயல்புக்கு வந்துவிடும். அதன்பிறகு மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்தை மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்துகள் சாப்பிடும் அதேவேளையில் நாம் உண்ணும் உணவு முக்கியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். ஒருவேளை உணவாக பழங்கள் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வைத்தரும். பழங்களில் உள்ள இனிப்பு இயற்கையானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. பழங்களை எந்தக்காரணம் கொண்டும் வெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழம், நாவல்பழம் சிறந்தது. நாவல் பழம் மட்டுமல்லாது, அதன் கொட்டை வேர் ஊறிய நீர் ஆகியவை நோயை கட்டுப்படுத்தும்.

பச்சைநிற காய்கறிகள்

காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் முழு நெல்லிக்காயும், அதைவிட இன்னொரு மடங்கு அதிகமாக பாகற்காயும் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் குடித்தால் இன்சுலின் சுரக்கும். முதலில் 48 நாட்கள் தொடர்ந்து அருந்திவிட்டு அதன்பிறகு அவ்வப்போது குடித்து வந்தால் போதும். இந்த சாறு எந்தவித பக்கவிளைவும் இல்லாதது. இதேபோல் மாலைவேளையில் ஆவாரம்பூவை நீர் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம். ஒரே சுவை பிடிக்காது என்றால் ஒருநாள் கொய்யா இலை, இன்னொரு நாள் சீத்தாமர இலை சேர்த்து கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

துவர்ப்பு மற்றும் கசப்பு அதிகமுள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் போன்ற பச்சைநிற காய்கறிகள், கீரைகளை சாப்பிடலாம். மேலும் கருப்பு கவுனி, கருங்குறுவை, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்றாலும் பாரம்பரிய அரிசிகளில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கலோரி அளவும் குறைவாகவே உள்ளதால் அவற்றைச் சாப்பிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்