கூடலூர்
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. தற்போது கோடை சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனினும் வாகன போக்குவரத்து குறையவில்லை.
மேலும் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் காலை, மாலை நேரத்தில் மாணவர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதை காண முடிகிறது. ஆனால் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் சாலைகளில் நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பிற பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூடலூர் கிளை நூலகம் முன்பு உள்ள நடைபாதையில் புதர்கள் சூழ்ந்துள்ளதால் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் நடைபாதையின் கரையோரம் தடுப்புக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதால் போதிய இடவசதி இல்லாமல் எதிரே வருபவர்களை உரசியவாறு செல்லும் நிலையை காணமுடிகிறது. எனவே இடையூறாக உள்ள புதர்களை அகற்றி சிரமமின்றி நடந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.