பசுமை பூங்காவை அழித்துவிட்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டுமா? என மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
பசுமை பூங்காவை அழித்துவிட்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டுமா? என மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
பசுமை பூங்காவை அழித்துவிட்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டுமா? என மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
மாநகராட்சி கூட்டம்
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதை கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேயர் அன்பழகன் பேசும்போது, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் முறையை நேரில் பார்த்து வந்தோம். ஆகவே திருச்சி மாநகராட்சியிலும் அதுபோல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் திருச்சி மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அனுமதி கோரியிருந்தோம். 4-வது கட்டமாக பாதாள சாக்கடை பணிக்கு ரூ.221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்டு பாதாள சாக்கடை திட்டம் முடிவடையாத தெருக்களின் விவரங்களை எழுதி தர வேண்டும். அவ்வாறு எழுதி தந்தால் விடுபட்ட இடங்களையும் சேர்த்து முழுவதுமாக முடிக்கப்படும் என்றார்.
சாலையில் திரியும் மாடுகள்
ரெக்ஸ் (காங்.) :- சாலைகளில் மாடுகள், பன்றிகள் அதிகஅளவில் சுற்றிதிரிகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது, குடிநீர் குழாய் உடைந்துவிடுகிறது. இதை விரைந்து சரி செய்ய பணியாளர்களை அதிகமாக நியமிக்க வேண்டும்.
காஜாமலைவிஜய் (தி.மு.க.) :- மாடுகளை பிடிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதமும் போடுங்கள். ஆனால் மாடுகளை துன்புறுத்தக்கூடாது. ஒரு சில ஒப்பந்ததாரர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மாடுகளை துன்புறுத்தியது குறித்து ஆதாரத்துடன் மாமன்ற கூட்டத்திலேயே தெரிவித்து இருந்தேன்.
ரூ.8 லட்சத்துக்கு ஏலம்
மேயர்:- திருச்சியில் தான் முதன்முதலாக மாடுகளை பிடிக்க பிரத்யேக வாகனம் தயாரித்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்களும் மாடு பிடிக்கும் விவகாரத்தில் தலையிட கூடாது. இதுவரை 248 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.8 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தற்போது மாடுகளை பிடித்து பாதுகாத்து வைக்க ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடம் கட்டப்பட உள்ளது. ஒப்பந்ததாரர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜவகர் (காங்.) :- ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையால் பொதுமக்களுக்கு மாநகராட்சியில் வரிபோட முடியவில்லை. இதனால் மாநகராட்சிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீரை காய்ச்சி குடிக்க...
நாகராஜ் (தி.மு.க.) :- வயலூர்சாலையில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. சாலைகள் சரியில்லாததால் இதுவரை 7 உயிர்பலி ஏற்பட்டு விட்டது. இனியாவது அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேயர்:- அங்கு பணிகள் முடிவுற்ற இடத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடியும்வரை மேற்கொண்டு அங்கு பள்ளம் தோண்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முத்துக்குமார் (தி.மு.க.) :- 10-வது வார்டுக்குட்பட்ட உறையூர் பகுதியில் தண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனால் பலர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிதண்ணீர் தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
மேயர்:- அந்த பகுதியில் மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு என்று அறிந்ததும், உறையூர் சோழராஜபுரத்தில் குடிதண்ணீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த பிரச்சினையும் இல்லை. காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளுக்கு தட்பவெப்ப நிலை மாற்றம் தான் காரணம் என கூறி இருக்கிறார்கள். ஆகவே தவறான தகவல்களை கூறக்கூடாது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
பசுமை பூங்கா
பிரபாகரன் (வி.சி.க.):- எனது வார்டில் ஏராளமான வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் கொசுக்கள் தேங்கி அவ்வப்போது காய்ச்சல் பரவுகிறது. ஆகவே சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு 2 மணிநேரம் உணவு இடைவேளை வழங்க வேண்டும்.
செந்தில்நாதன் (அ.ம.மு.க.) :- பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே பசுமை பூங்காவை அழித்துவிட்டு அங்கு ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டுமா? என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் நம்மால் பசுமை பூங்காவை உருவாக்க முடியாது.
கலைஞர் நூற்றாண்டு கட்டிடம்
மேயர்:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைய பூங்காக்களை ஏற்படுத்திவிட்டனர். கோர்ட்டு அருகே மட்டும் 3 பூங்காக்கள் உள்ளன. தற்போது பராமரிப்பு இன்றி உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது. பசுமைபூங்காவும் பராமரிப்பு இன்றி தான் உள்ளது. அங்கு மக்களுக்கு பயனுள்ள ஒருங்கிணைந்த மார்க்கெட்டை கொண்டு வரும்போது, மாநகரில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு ஒப்புதல்அளிக்கலாம். மாநகராட்சி மைய அலுவலகத்துக்குள் ரூ.41 கோடியே 37 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் திட்டத்துக்கான நிதியை அரசிடம் இருந்து பெற அனுமதி கோர கருத்துரு அனுப்புவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.