நெல் சாகுபடிக்கு யூரியா உரம் தட்டுப்பாடு

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால், அதை போக்குவதற்கு திண்டுக்கல்லில் இருந்து 150 டன் உரம் கொண்டு வரப்பட்டது.

Update: 2023-08-26 23:00 GMT

உரம் தட்டுப்பாடு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கிணற்று பாசனம் மூலம் நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் முதல்போக பாசனத்துக்கு கடந்த ஜூன் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அணையின் நீர்மட்டம் குறைவாகவே இருப்பதால் விவசாயிகள் தாமதமாகவே நடவு பணிகளை தொடங்கினர்.

நடவு பணிகள் முடிந்து தற்போது மேலுரம் இடும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளன. அதற்கு யூரியா உரம் விவசாயிகள் பயன்படுத்துவார்கள். ஆனால் தேனி மாவட்டத்தில் சமீப காலமாக யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. உரக்கடைகளில் உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப உரம் கிடைப்பது இல்லை. உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

150 டன் வரத்து

இதையடுத்து திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்தின் தேவைக்காக உரம் கொண்டு வர வேளாண்மைத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேனி மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரத்து 950 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய உடனடி உரம் தேவைக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 150 டன் உரம் நேற்று அனுப்பப்பட்டது. அவை முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளில் உள்ள 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த உரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நிலம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பயிரின் அடிப்படையில் வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மதுரை ரெயில் நிலையத்துக்கு ஸ்பிக் யூரியா நிறுவனத்திடம் இருந்து 200 டன் யூரியா உரம் நாளை (திங்கட்கிழமை) பெறப்பட உள்ளது. நடப்பு வாரத்தில் யூரியா உரம் கிடைப்பது சீராகிவிடும். உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுக்கலாம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்