உடன்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு:ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை
உடன்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், 200 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் லாரிகள் மூலம் விற்கப்படும் ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கடும் குடிநீர் தட்டுப்பாடு
உடன்குடி பஞ்சாயத்து யூனியனிலுள்ள பரமன்குறிச்சி, தண்டு பத்து, செட்டியாபத்து, மணப்பாடு, மாதவன்குறிச்சி உட்பட்ட 17 கிராம ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி ஆகியவற்றில் 200 கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராம மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த கிராமமக்களுக்கு குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுக்குழாய் பகுதியில் காலி குடங்களை பொதுமக்கள் வைத்துள்ளனர்.
ஒரு குடம் ரூ.10-க்கு விற்பனை
தாமிபரணி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால், கூட்டு குடிநீர் திட்ட உறைகிணறுகள் பகுதி வறண்டு போயுள்ளது. இதனால் அந்த பகுதியிலிருந்து தண்ணீரை பம்பிங் செய்து குழாய் மூலம் வினியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், திருச்செந்தூர் எல்லப்பன்நாயக்கர் குளத்தில் இருந்தும். மாநாடு பகுதியில் இருந்தும், ஆழ்குழாய் கிணறு மூலம் இப்பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த ஏற்பாட்டின் மூலமும் போதிய தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் தனியார் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் வேறு வழியின்றி பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.