வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகராட்சி பணிகள் மேற்கொள்வதற்கு, வசதியாக உடனே நிலவையில் உள்ள சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து வரி, வாடகை செலுத்தாமல் இருந்து வரும் நபர்களை கண்டறிந்து குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்றும், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி தெரிவித்துள்ளார்.