கலெக்டர் அலுவலகம் முன்பு கடைக்காரர்கள் தர்ணா

தேனி புதிய பஸ் நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-21 19:00 GMT

நடைமேடை மாற்றம்

தேனி புதிய பஸ் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. அதில் 3-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்ட திருப்பூர், கோவை பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் 2-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டன. இதனால், 3-வது நடைமேடை வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு கடைகள் ஏலம் எடுத்து நடத்தி வரும் கடைக்காரர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வந்தனர். இதுதொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடைக்காரர்கள் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் 3-வது நடைமேடையில் கடைகள் நடத்தி வரும் கடைக்காரர்கள் நேற்று தங்களின் கடைகளை அடைத்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தர்ணா போராட்டம்

இதையடுத்து கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, மாயாராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து, திருப்பூர், கோவை பஸ்களை 3-வது நடைமேடையில் இருந்து மாற்றியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அந்த பஸ்களை 3-வது நடைமேடையில் இருந்தே இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்