ரூ.32 லட்சம் வாடகை செலுத்தாததால் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கடைகள் இடித்து அகற்றம்

Update: 2023-02-21 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் செல்லியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள இந்த கோவில்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் தர்மபுரி நேதாஜிநகர் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை கட்டி, கோவிலுக்கு வாடகை செலுத்தி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒருவர் வாங்கி, அதில் கடைகளை கட்டினார். அவர் பல ஆண்டுகளாக நிலத்துக்கான வாடகை செலுத்தவில்லை. மொத்தம் ரூ.32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் அவர் இருந்து வந்தார். இந்த தொகையை செலுத்தும்படி பலமுறை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், அந்த நிலத்தில் உள்ள கடைகளை அகற்றும்படி உத்தரவிடபப்ட்டது. இதைத்தொடர்ந்து, தர்மபுரி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில், கோவில் செயலாளர்கள் ராதாமணி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட நிலத்தில் இருந்த கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்