ஒடுகத்தூரில் 2-வது நாளாக கடையடைப்பு

பேரூராட்சி தலைவரின் கணவ் தாக்கப்பட்டதை கண்டித்து ஒடுகத்தூரில் 2-வது நாளாக கடையடைப்பு நடைபெற்றது. போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு மாலையில் கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2023-01-18 16:04 GMT

தாக்குதல்

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் பாஸ்கரன். இவரது மனைவி சத்யாவதி தற்போது ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவராக உள்ளார்.

காணும்பொங்கல் அன்று பேரூராட்சி தலைவருக்கு மேளதாளங்கள் முழங்க மரியாதை செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரனை மேளதாளகளுடன் அழைத்து வந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.

அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி வெங்கடேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர். தனது அண்ணன் வெங்கடேசனுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று கூறி, அவரது தம்பி குபேந்திரன், பேரூராட்சி தலைவரின் கணவர் பாஸ்கரனை தாக்கியுள்ளார்.

கடையடைப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரனின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு, குபேந்திரனை கைது செய்ய வலியுறுத்தினர். வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் குபேந்திரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாஸ்கரனின் ஆதரவாளர்கள் மற்றும் வணிகர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஒடுகத்தூரில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வணிகர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குபேந்திரனை விரைவில் கைது செய்து விடுவதாகவும், போராட்டங்களை கைவிட்டு அனைவரும் கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்பேரில் நேற்று மாலை 4 மணி முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் குபேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்