சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறும். வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடராஜருக்கு வெள்ளைச்சாத்தி, மாலை 6 மணிக்கு பச்சை சாத்தி ஆகியவை நடக்கிறது. 13-ந்தேதி காலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். 14-ந்தேதி மாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருள்கின்றனர். இரவு 10 மணிக்கு தீர்த்தவாரியை தொடர்ந்து சுவாமி-அம்பாள் அத்ரி மகரிஷிக்கு காட்சி அளிக்கிறார்கள். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர் முருகன், தக்கார் ரேவதி, ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் பங்குனி உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.