திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம்
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே செட்டிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான செட்டிகுளம் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கி பள்ளியில் புதிதாக சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பள்ளியைச் சார்ந்த 78 பேருக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. திறனாய்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஷர்மிலா என்ற மாணவிக்கு மேல்படிப்பிற்கான உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது மேலும் திறனாய்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் ஜேசு அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பேசில் ககாரின், பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகள் லிங்கதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்பயிற்சி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.