பகிர்மான குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் பகிர்மான குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் பகிர்மான குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பகிர்மான குழு தலைவர் தேர்தல்
பாலாறு வடிநில கோட்டத்தில் உள்ள பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியும், சப்-கலெக்டருமான பிரியங்கா தேர்தலை நடத்தினார். காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பகிர்மான குழு 2-க்கு முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பகிர்மான குழு 3-க்கு நல்லதம்பி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
போட்டியின்றி தேர்வு
இதற்கிடையில் பகிர்மான குழு தலைவர்கள் பதவிக்கு அவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று பகிர்மான குழு 2 மற்றும் 3-க்கு தலா 5 உறுப்பினர்கள் வீதம் 10 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தனி தாசில்தார்கள் வெங்கடாச்சலம், ஜெயசித்ரா, உதவி செயற்பொறியாளர் சக்திகுமார் மற்றும் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர். பகிர்மான குழு தலைவர்கள் இணைந்து தேர்தலை நடத்தி திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவரை தேர்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.