திருவாரூரில், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுமா?

தஞ்சை உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்குவது போல திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-18 19:15 GMT

திருவாரூர்;

தஞ்சை உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்குவது போல திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வணிக நிறுவனங்கள்

தஞ்சையை அடுத்து விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட மாவட்டம் திருவாரூர். திருவாரூரில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் தான் கண்ணில் படும். இருப்பினும் புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என ஏராளமான நிறுவனங்களும் இங்கு உள்ளன. இதனால் திருவாரூருக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

புதிய பஸ் நிலையம்

திருவாரூரில் இருந்த பழைய பஸ் நிலையத்தில் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் பழைய பஸ் நிலையம் அருகில் தான் வணிக நிறுவனங்கள், ரெயில் நிலையம், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் உள்ளன.இதனால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பஸ் நிலையமாக திருவாரூர் பழைய பஸ் நிலையம் உள்ளது. திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதி இல்லை.

நகர விரிவாக்கம்

தற்போதைய காலகட்டத்தில் திருவாரூரில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நகரின் எல்லையும் விரிவாகி வருகிறது.நகர விரிவாக்கம் இருந்தாலும் அதற்கு ஏற்ப போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது, அவசியம். தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு போன்றவற்றால்நடுத்தர வர்க்க மக்கள் ஆட்டோ பிடித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பணவசதி இன்றி உள்ளனர்.சென்னை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பெரு நகரங்களில் பொதுமக்களின் வசதிக்காக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஷேர் ஆட்டோக்கள்

இதைப்போல திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி வரையிலும், நாகை சாலையில் கிடாரங்கொண்டான் வரையிலும், தஞ்சை சாலையில் அம்மையப்பன் வரையிலும், மன்னார்குடி சாலையில் தேவர்கண்டநல்லூர் வரையிலும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களது பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வசதியாக இருக்கும்.எனவே திருவாரூரில் பொதுமக்களின் வசிக்காக ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு பொது செயலாளர் ரமேஷ் கூறியதாவது:-திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன்பெறுவாா்கள்.

திருவாரூரில் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும் என்று 25 ஆண்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஷேர் ஆட்டோ இயக்கப்பட்டால் பொதுபோக்குவரத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது. ஷேர் ஆட்டோக்கள் எந்த நிறுத்தத்திலும் நின்று பயணிகளை ஏற்றி செல்லும். எனவே திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கவேண்டும்.

ஆட்டோ பயணம்

திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் அனிபா:-திருவாரூரை பொருத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஆட்டோவிற்கான அனுமதி குறைவு. மேலும் திருவாரூரில் குறைந்த தொலைவில் நாகை மாவட்டம் உள்ளது. இதனால் திருவாரூரில் இருந்து நாகைக்கு ஆட்டோக்கள் சென்று வந்தால் போக்குவரத்து விதிகளின் படி அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதால் ஆட்டோ பயணம் குறைந்து விட்டது. இந்த சமயத்தில் ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்தால் சாதாரண ஆட்டோக்களின் பயணம் குறையும். ஷேர் ஆட்டோக்களுக்கு அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் புதிதாக லாபநோக்கில் செயல்படுபவர்களுக்கு அனுமதி அளிக்காமல், ஏற்கனவே சிரமத்துடன் ஆட்டோஓட்டிவரும் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்