சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர் கைது

சங்கராபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Update: 2023-10-17 18:45 GMT

சங்கராபுரம்

நிதி நிறுவனம் நடத்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் சமீர்அகமது(வயது 26). இவர் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.

இதை நம்பி மூரார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் அவர் கூறியபடி வட்டியை தராததால் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் திடீரென தலை மறைவானார்.

பின்னர் சென்னையில் இருந்த அவரை வாடிக்கையாளர்கள் பிடித்து மூரார்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது வாடிக்கையாளா்கள், முகவா்கள் பணம் கேட்டு சமீர் அகமதுவை தாக்க முயன்றனர். இதை அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

சென்னைக்கு அழைத்து சென்றனர்

விசாரணையில், சமீர் அகமது மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளை அலுவலகம் அமைத்து கூடுதல் வட்டி தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சமீர் அகமது மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

தனியார் நகைக்கடை

எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ஆகும். எனது சகோதரியை கள்ளக்குறிச்சியில் திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அப்பகுதியில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நான் 15 வருடமாக மூரார்பாளையத்தில் வசித்து வருகிறேன். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு திருமணமாகி ரூபா என்ற அப்ரீன் என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். 2020-ல் சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடை பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தது. அதேபோல் நானும் எனது பெயரில் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் தொடங்கி முகவா்கள் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணத்தை பெற்று முதலீடு செய்தேன். இதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். பின்னர் பொதுமக்கள் தொந்தரவு தாங்க முடியாமல் அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தபோது வாடிக்கையாளர்கள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

கைது

இதையடுத்து சமீர்அகமதுவை போலீசார் கைது செய்து சங்கராபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோா்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஆதியான் உத்தரவிட்டார். இதையடுத்து சமீர்அகமதுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சமீர் அகமது மீது சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 30 பேர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீர் அகமது எத்தனை வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பணம் வசூல் செய்தார். எத்தனை பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்