நிழல் தந்து ரம்மியமாக காட்சியளிக்கும் புளியமரங்கள் பாதுகாக்கப்படுமா?

நிழல் தந்து ரம்மியமாக காட்சியளிக்கும் புளியமரங்கள் பாதுகாக்கப்படுமா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-22 20:41 GMT

வெட்டப்படும் மரங்கள்

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பார்கள். இந்த சொல் பெற்றோர், இளமை போன்ற பலவற்றின் அருமையை உணர்த்த எடுத்துக்காட்டாக கூறப்பட்டாலும், நேரடியாக பொருள்படுவது மரங்களுக்குத்தான். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சாலைகளில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லும்போது சற்று ஒதுங்கி நின்று இளைப்பாற நிழல்மிகுந்த மரத்தடி ெதன்படாதா? என்று முதியவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்பார்ப்பதுண்டு. அதிலும் புறவழிச்சாலை போன்றவற்றில் சற்று ெதாலைதூர பயணம் மேற்கொள்ளும் சமயங்களில் கட்டிடங்களே இல்லாத பகுதியில் நிழலின் தேவையை உணரும்போது, மரங்களின் அருமை தெளிவாக புலப்படும்.

நிழலுக்காக மட்டும் மரங்கள் தேவைப்படுவதில்லை. நல்ல மழை பெறுவதற்கும், தூய்மையான காற்றுக்கும் முக்கிய காரணியாக மரங்கள் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அதனாலேயே வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் அசோகர் காலத்தில் இருந்தே சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கப்படும் முறை உள்ளது. தற்போது மரம் வளர்ப்பதன் அவசியம் உணர்ந்து பல பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. விதைப்பந்துகளும் வீசப்படுகின்றன. இருப்பினும் மனிதர்களின் தேவைக்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது.

புளியமரங்கள் அகற்றம்

இதுேபான்றே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை-திருச்சி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது சாலையின் இரு ஓரங்களிலும் இருந்த புளிய மரங்கள் வெட்டப்பட்டும், வேரோடும் அகற்றப்பட்டன. மேலும் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை வழியாக செல்லும் பெரம்பலூர்-மானாமதுரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பிறகு சாலையின் இரு மருங்கிலும் இருந்த புளிய மரங்கள் சுமார் 90 சதவீதம் அகற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள 10 சதவீதம் புளிய மரங்கள் கருணை அடிப்படையில் விட்டு வைக்கப்பட்டுள்ளன. அந்த மரங்கள் தற்போது அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் விவசாயிகளுக்கும் நிழல் தந்து, அவற்றின் தேவையை குறிப்பால் உணர்த்துகின்றன.

இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் திட்டத்திற்கான பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. இதில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக சாலை ஓரங்களில் இருந்து நிழல் தந்த பல ஆயிரக்கணக்கான புளிய மரங்களில் பெரும்பாலானவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர்- ஆத்தூர் பிரதான சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளுக்காக பெரும்பாலான இடங்களில் புளிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

எண்ணிக்கை குறைந்தது

முன்பு புளியமரங்களில் காய்க்கும் புளியம் பழங்களை பறித்துக் கொள்வதற்காக நெடுஞ்சாலை துறை மூலமாக அவ்வப்போது டெண்டர் விடப்படுவது வழக்கமாக இருந்தது. மேலும் கிராம மக்களுக்கு தேவைப்படும் புளியம் பழங்கள் மற்றும் புளிய மரங்களின் விறகு சுள்ளிகள் எளிதாக கிடைத்தது. தற்போது புளிய மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் புளியம் பழங்களை கிராம மக்கள் தங்களது அன்றாட சமையல் தேவைகளுக்காக சேகரித்து செல்வது வெகுவாக குறைந்து விட்டது.

மரங்கள் வெட்டப்படும் நிலை தொடருமேயானால் இனிவரும் தலைமுறையினர் புளிய மரங்களை காண்பதற்காக புளியமர சரணாலயம் அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கோரிக்கை

பெரம்பலூர்-ஆத்தூர் பிரதான சாலையில் வெங்கனூர் -உடும்பியம் இடையே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. அவை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு நிழல் தந்து, பசுமையாகவும், ரம்மியமாகவும் காட்சியளிக்கின்றன. தோப்பு போல அடர்ந்துள்ள அந்த புளிய மரங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை போன்று பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புளியமரங்களை அகற்றாமல் சாலை பணி

இது குறித்து வெங்கனூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கலியமூர்த்தி கூறுகையில், எங்கள் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆத்தூர் மார்க்கங்களில் இருந்தும் வெங்கனூருக்கு மக்கள் வந்து செல்வார்கள். அவ்வாறு சாலையில் வருபவர்களுக்கு சாலையோரத்தில் புளியமரங்கள் வரிசையாக குடைபிடித்தாற்போல் நிற்கின்றன. புளியமரங்கள் செழித்து வளர்ந்து பலநூறாண்டு காலம் இருந்து நிழல், புளியங்கனிகள் தருபவை. தேசிய நெடுஞ்சாலைகளை மற்றும் மாநில சாலைகளை அகலப்படுத்தும் பணியின்போது கூடுமானவரை புளியமரங்களை அகற்றாமல், சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். புளியமரங்களுடன் மற்றொரு தாவரத்தை ஒப்பிட இயலாது. பல மரங்கள் ஆயிரம் ஆண்டுகளைக்கூட கடந்தவையாக இருக்கும். சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் ஒரு புளிய மரத்தை அகற்றினால் 10 புதிய மரக்கன்றுகள் நடவேண்டும் என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு உத்திரவிட்டது. ஆனால் ஒரு புளிய மரம் அகற்றப்படும்போது 10 புளியமரக்கன்றுகள் அல்லது வேம்பு, வாகை மரக்கன்றுகள் நட்டிருந்தால், சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும். ஆகவே முடிந்தவரை புளியமரங்களை வெட்டி அகற்றக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அகற்றினால் அதற்கு நிகராக புளியமரங்களையே மீண்டும் நடுவதற்கு மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்