பழனி மலைக்கோவிலில் நிழற்பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழைக்கு, பழனி மலைக்கோவில் நிழற்பந்தல் சரிந்து விழுந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-30 19:00 GMT

கொட்டித்தீர்த்த கனமழை

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மாலை நேரங்களில், மனதை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

வழக்கம் போல் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சரிந்து விழுந்த நிழற்பந்தல்

மழை பெய்து கொண்டிருக்கும்போது சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதில் பழனி மலைக்கோவிலில் வெளிபிரகாரத்தின் வடக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ஊழியர்கள் விரைந்து வந்து சரிந்து விழுந்த நிழற்பந்தலை உடனடியாக அகற்றினர்.

நிழற்பந்தல் சரிந்து விழுந்தபோது, அந்த இடத்தில் பக்தர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

ரோப்கார் சேவை பாதிப்பு

பழனி முருகன் கோவிலில், காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரோப்கார் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதேபோல் மாலை 7 மணிக்கு நடைபெறும் தங்க ரத புறப்பாடும் நடைபெறவில்லை. கனமழை எதிரொலியாக, பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மின்சார வினியோகம் சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்