கோவை
கோவையில் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் தொல்லை
கோவையை சேர்ந்தவர் 30 வயது பெண். திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் எதிர்புறம் கடந்த 4 மாதங்களாக 45 வயது ஆண் ஒருவர்,அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஆண் நபர், தினமும் வீட்டு முன்பு நின்று கொண்டு ஆபாசமாக நடந்து, எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த போது, அவரை அந்த நபர் தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த அந்த பெண் அவரை கண்டித்தபோது, அந்தபெண்ணை விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பொதுஇடத்தில் ஆபாசமாக நடந்து, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
இதுபோன்று கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். திருமணமானவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவுக்கார பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் அரை நிர்வாண கோலத்தில் அமர்ந்திருந்த ஒரு நபர் அவர்களை பார்த்து ஆபாச சைகை காட்டி அழைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள், கடைவீதி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பெண்களிடம் ஆபாச சைகை காட்டியது தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த 37 வயது ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது. ைதை தொடர்ந்து போலீசார் டிரைவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.