மகளுக்கு பாலியல் தொல்லை: மனைவியை அடித்து துன்புறுத்திய தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மனைவியை அடித்து துன்புறுத்திய தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-07-28 18:51 GMT

பாலியல் தொல்லை

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 47 வயது கூலி தொழிலாளி சென்னையில் பணிபுரிந்து வந்தார். மேலும், மாதத்திற்கு ஒரு முறை அரியலூரில் உள்ள வீட்டிற்கு வருவார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மகள் திடீரென அழுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனது மகளிடம் விசாரித்தபோது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி தனியாக வீடு எடுத்து மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி அந்த பெண் இயற்கை உபாதைக்காக வெளியே வந்த போது அவரது கணவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்ததில் அந்த பெண்ணின் தலையில் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது.

9 ஆண்டுகள் சிறை

இதையடுத்து அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அரியலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

இதில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மனைவியை அடித்து துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து கூலி தொழிலாளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்