சிறுமிகளிடம் அதிகரிக்கும் பாலியல் சீண்டல்
சிறுமிகளிடம் அதிகரிக்கும் பாலியல் சீண்டல்
பின்னலாடை தொழில் மூலமாக வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வரும் நகராக திருப்பூர் உள்ளது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பொருளாதாரத்தை ஈட்டும் அதே வேளையில் தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதை விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பல்வேறு பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மூலமாக பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் சமீப காலமாக திருப்பூரில் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் குமரன் காலனியை சேர்ந்த 40 வயது தொழிலாளி தனது உடன் பிறந்த அண்ணன் மகளிடம் 4 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுமி 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் காலங்களில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அந்த தொழிலாளியின் மனைவி பார்த்து கண்டித்துள்ளார். அதன்பிறகு அண்ணன்-தம்பிக்குள் சண்டை வர கூட்டுக்குடும்பமாக குடியிருந்தவர்கள் பின்னர் பிரிந்து சென்று விட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முன் அந்த மாணவி பள்ளியில் படிக்கும்போது மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தபோது அந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து டாக்டரிடம் தெரிவித்துள்ளார்.
உறவினர்களால்பாலியல் சீண்டல்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த தொல்லை தனக்கு நடந்தாலும் அதன்பிறகு அந்த சம்பவங்களை நினைத்து, நினைத்து பார்க்கும் நேரத்தில் மயங்கி விழுந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளாள். மாணவி அடிக்கடி மயக்கம் அடைவதை பெற்றோரும் உறுதிப்படுத்தினார்கள். உடனடியாக அந்த டாக்டர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்க மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு போக்சோ வழக்கில் அந்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தனது அண்ணன் மகளிடம் பாலியல் தொல்லை செய்தவர் கைதாகி சிறை சென்றுள்ளார்.
இதுபோல் தந்தை, மாமா, பக்கத்து வீட்டுக்காரர் என நம்பிக்கையுடன் மிகவும் நெருங்கி பழகக்கூடிய நபர்கள் மூலமாகவும் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு அதன்பிறகு போலீசில் புகார் தெரிவிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் மட்டும் 200-ஐ தாண்டி மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
காதல் வயப்படும் சிறுமிகள்
பனியன் நிறுவனங்களில் போதுமான வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளிடம் அத்துமீறி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதுபோல் கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு ஏற்படும் கள்ளத்தொடர்பு சம்பவங்களும் குழந்தைகளை பாதிப்பதாக தெரிவிக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக பள்ளி பருவத்தில் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் மாணவிகள் குறித்து முதலில் போலீஸ் நிலையத்தில் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதன்பிறகு மாணவிகளை மீட்கும்போது அவர்கள் காதலில் சென்றது தெரியவருகிறது.
அதன்பிறகு மகளிர் போலீசார் போக்சோ வழக்காக பதிவு செய்து மாணவியை மீட்கிறார்கள். ஆனால் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்தால் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவராக இருந்தால் அவர் இளம் சிறார் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். போக்சோ பிரிவு வழக்குகளுக்கு கடும் தண்டனை என்பதால் அவர்கள் வாழ்க்கையை தொலைக்கும் நிலை ஏற்படுகிறது.
விழிப்புணர்வு அவசியம்
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, 3 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை அண்டை அயலாரிடம் மிகவும் கவனமாக இருக்கச் செய்வது பெற்றோரின் கடமையாகும். உறவினர்களால் கூட பாலியல் தொந்தரவு நடக்கிறது. யாரையும் நம்பக்கூடாது. சிறுமிகளுக்கு தவறான தொடுதல் போன்றவற்றை புரிய வைக்க வேண்டும். அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பெற்றோரிடம் மறைக்காமல் தெரிவிக்கவும் பழக்க வேண்டும். தந்தை, சித்தப்பா, மாமா போன்றவர்களால் கூட சிறுமிகள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் அவர்கள் மீது கவனம் செலுத்துவது அவசியம்' என்றனர்.
பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் சிறுமிகளை காக்கும் வகையில் அவர்களுக்கு பள்ளிகளில் விழிப்புணர்வு அளிப்பது கட்டாயமாக உள்ளது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். திருப்பூர் மாவட்டத்தில் சமீபகாலமாகசிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவது சமூகத்துக்கு ஏற்றதாக இல்லை. இதை அதிகாரிகள் கவனித்து செயல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தினரின் எதிர்பார்ப்பாகும்.