திருவள்ளூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-09-20 18:59 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் 3 மாணவர்கள் தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி மாணவர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவி, அது குறித்து வகுப்பாசிரியரிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், மாணவியின் புகாரை அலட்சியம் செய்த ஆசிரியர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் கிடைத்த துணிச்சலின் காரணமாக ஆகஸ்டு 3, 4-ந்தேதிகளிலும் அம்மாணவியை தொடர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதனால், ஆகஸ்டு 4-ந்தேதி கடும் வயிற்றுவலிக்கு ஆளான மாணவி, அது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், மாணவிக்கு நீதிக்கு மாறாக அநீதியே கிடைத்தது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டிய பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததுடன், மாணவிக்கு மனநிலை பாதித்து விட்டதாகக் கூறி அவமதித்திருக்கின்றனர்.

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும். இந்த வழக்கின் விசாரணையை நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்