வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது

பேரூர் அருகே வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. மறியலில் ஈடுபட்டதாக 40 பேர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-08-09 16:00 GMT

பேரூர்

பேரூர் அருகே செம்மேடு, திரு.வி.க வீதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி, தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடைக்கழிவு நீர், வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கிறது.

தற்போது பெய்து வரும் கனமழையால் திரு வி.க வீதியில், மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்து விட்டது.

இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனக் கூறி, அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருட்டுப் பள்ளம் - பூண்டி செல்லும் சாலையில் நேற்று திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சதானந்தம், ஆலாந்துறை போலீசார் ஆகியோர் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மோட்டார் வைத்து தேங்கி இருந்த சாக்கடைக் கழிவுநீரை அகற்றினர். அங்குள்ள தோட்டத்து உரிமையாளர் அடைத்து வைத்திருந்த, நிலவியல் ஓடை பாதையை உடைத்து மழைநீரை வெளியேற்றினர்.

இதற்கு பின்னர், நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒரு மாதத்தில் கழிவுநீர் தேக்கத் தொட்டி கட்டி, மோட்டார் மூலம் கழிவுநீர் அகற்றப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்‌. இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்ன அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக செம்மேடு, திரு வி.க நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 30) உள்பட 40 பேர் மீது, ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்