கடுமையான குளிர் எதிரொலி: பயணிகள் வரத்து குறைவால் 6 விமான சேவைகள் ரத்து

சென்னையில் கடுமையான குளிர் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவால் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-01-29 05:54 GMT

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் அதிகாலை 3:15 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இதன் எதிரொலியாக இரவு நேர விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும் பயணிகள் வரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அதில் பயணிக்க வேண்டிய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்