திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் கைவரிசை நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி பாதுகாப்பு அரணாக இருந்த பெட்டகத்தால் பல லட்சம் நகைகள் தப்பின
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது. பாதுகாப்பு அரணாக இருந்த பெட்டகத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பாலாஜி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை செந்தில்குமார் வழக்கம்போல் நகைக் கடையை திறந்தார். அப்போது கடையின் உள்ளே செங்கற்கள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, சுவரில் மர்ம ஆசாமிகள் துளையிட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்து இருப்பது தெரியவந்தது.
சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி
இது தொடர்பாக ஆரோவில் போலீசுக்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நகைக்கடைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்ட பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் சோமசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தார்.
போலீசாரின் விசாரணையில், 3-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சுவரில் ஒரு ஆள் உள்ள நுழையும் அளவுக்கு துளையிட்டு கைவரிசை காட்ட முயன்றுள்ளனர். துளையிட்ட சுவரின் மறுபக்கம் நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகம் இருந்தது. அதனை நகர்த்த முடியாததால் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
நகைகள் தப்பின
இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்பு அரணாக இரும்பு பெட்டகம் இருந்ததால் அதை கொள்ளையர்களால் நகர்த்த முடியாமல் போனது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பின.
கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நகை்கடை சுவரில் மர்ம ஆசாமிகள் துளை போட்ட சம்பவம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.