3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு
நெல்லையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு காணப்பட்டது
நெல்லையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,719 வழக்குகளில் ரூ.25 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
புதுடெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை தேசிய மக்கள் நீதிமன்றங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனைப்படி இந்த ஆண்டுக்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
நெல்லை கோர்ட்டு வளாகம் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 9 கோர்ட்டு வளாகங்களில் இந்த நீதிமன்றங்கள் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, போக்சோ கோர்ட்டு நீதிபதி அன்பு செல்வி, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி குமரேசன், மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன்ராம், ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு கோர்ட்டு நீதிபதி செந்தில் முரளி, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திருவேனி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.25 கோடிக்கு தீர்வு
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், கோர்ட்டுகளில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 5,966 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 3,413 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.22 கோடியே 39 லட்சத்து 64 ஆயிரத்து 200 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.
மேலும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் மொத்தம் 518 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 306 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 89 லட்சத்து 64 ஆயிரத்து 928 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.25.29 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.