தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 523 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 523 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-11-12 19:28 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான லதா, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் ஆகியோர் உள்ளடக்கிய இரண்டு சிறப்பு அமர்வுகள் உருவாக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் 900 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 49 வங்கி வாராக்கடன் வழக்குகள், 69 நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தப்பட்ட வழக்குகள், 5 விபத்து வழக்குகள், 7 சிவில் வழக்குகள், 393 குற்றவியல் அபராத வழக்குகள் என மொத்தம் ரூ.42 லட்சத்து 80 ஆயிரத்து 266 மதிப்பிலான 523 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வக்கீல்கள், போலீசார், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் பல்வேறு வழக்குகளை, சுமுகமான முறையில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தங்களுக்கிடையே சமரசமாக பேசி எளிதில் முடித்துக் கொள்ளும் வகையில் செயல்படும் மக்கள் நீதிமன்றத்தினை பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான லதா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்